பீக் ஹவர்சில் 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்
சென்னை ஆலந்தூர்- வண்ணாரப்பேட்டை இடையே பீக் ஹவர்சில் இனி 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீல வழித்தடத்தில் கூடுதல் மெட்ரோ இரயில் சேவைகள்... சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், நீல வழித்தடத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மெட்ரோ இரயில் பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில், நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகள் மெட்ரோ இரயில் நிலையங்களில் மெட்ரோ இரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காகவும், வேகமான பயணத்தை வழங்குவதற்காகவும், கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுகின்றன.
கூடுதலாக இயக்கப்படும் இந்த மெட்ரோ இரயில் சேவைகளின் மூலம், நீல வழித்தடத்தில் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை, நெரிசல் மிகுந்த நேரங்களில் (காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை) 6 நிமிட இடைவெளி மற்றும் 3 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த மெட்ரோ இரயில்கள் இதன் பிறகு முற்றிலுமாக 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


