எனக்கு பிரச்சாரத்தை விட ஒரு உயிர் தான் முக்கியம் : கர்ப்பிணிக்கு சிகிச்சை செய்த வேட்பாளர்..!

 
1

ஆந்திராவில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் மே 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த முறை ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரான கோதிபதி லட்சுமி, பிரகாசம் மாவட்டம் உள்ள தர்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். மருத்துவரான இவர் தேர்தல் பிரசாரத்துக்குப் புறப்பட்டு சென்றார். அப்பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவமனைக்கு பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணான வெங்கட ரமணா என்பவர் அனுமதிக்கப்பட்டார்.

அந்தப் பெண்ணுக்கு அமினோடிக் திரவம் குறைந்து வருவதாகவும், கர்ப்பிணிப் பெண்ணுக்கோ, கருவில் இருக்கும் குழந்தையின் உயிருக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக சோதனையில் தெரியவந்தது. ஆபத்தான நிலையில் இருக்கும் கர்ப்பிணியை குண்டூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்த தகவல் கோதிபதி லட்சுமிக்கு தெரியவந்தது. அதையடுத்து அவர் கர்ப்பிணி வெங்கட ரமணா அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்கு வந்தார்.

அங்குள்ள மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்தார். தற்போது தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். பரபரப்பான தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில், கர்ப்பிணிக்கு குழந்தை பேறு பார்த்த வேட்பாளர் கோதிபதி லட்சுமியை பலரும் பாராட்டி வருகின்றனர்.