"அரசு வேலையும் போச்சு... மானமும் போச்சு"- 5 லட்சத்திற்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் அரசு அதிகாரி
திருப்பூரில் ஒப்பந்ததாரரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாநகராட்சியில் சாலைப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் முருகனிடம், நிலுவையில் உள்ள பில் தொகையை விடுவிக்க 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட இளநிலை பொறியாளர் சுப்பிரமணியன், லஞ்ச ஒழிப்புத் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாய் தரவேண்டும் என அவர் வற்புறுத்திய நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகன் இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய பணத்தை கணபதிபாளையத்தில் வைத்து சுப்பிரமணியனிடம் முருகன் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சுப்பிரமணியனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், இந்த லஞ்ச விவகாரத்தில் மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கான தொகையை வழங்க அரசு ஊழியரே முட்டுக்கட்டையாக இருந்து லஞ்சம் கேட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான பொறியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

