ரூ.164 கோடியில் பிரமாண்ட இரும்பு மேம்பாலம்- சென்னையில் நாளை திறப்பு
சென்னை அண்ணா சாலை சந்திப்பு தொடங்கி தியாகராய நகர் வடக்கு தெற்கு உஸ்மான் சாலை வரை கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இரும்பு மேம்பாலம் நாளை திறக்கப்படவுள்ளது.

சென்னையின் மிகப்பெரும் பிரச்சனையான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.164 கோடியில் 1.2 கிலோ மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது முதல் இரும்பு மேம்பாலம். இந்த பாலம் சென்னை அண்ணா சாலை சந்திப்பு தொடங்கி தியாகராய நகர் வடக்கு தெற்கு உஸ்மான் சாலையை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் நாளை திறக்கப்படவுள்ள நிலையில், பிரமாண்ட பாலத்தின் சிறப்புகளை கழுகு பார்வையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஐஏஎஸ்.
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய ஜவுளி மற்றும் தங்கநகை வணிகம் நடைபெறும் முக்கிய இடமாக தி.நகர் இருப்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் என்பது சாதாரண விஷயம். மிகவும் சிறிய சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள சாலை என்பதால் தி.நகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பது வழக்கம். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அண்ணா சாலை மற்றும் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தை இணைத்து புதிய மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். இந்நிலையில் 55 தூண்களுடன், 3800 மெட்ரிக் டன் இரும்பு கொண்டு, 7.5 மீட்டர் அகலம் உடைய இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் நாளை திறக்கப்படவுள்ளது. இப்பாலத்தின் முக்கியம்சவம் என்னவென்றால் இந்த மேம்பாலம் வழியாக 45 நிமிட பயணம் இனி வெறும் ஐந்து நிமிடம் போதும்.

