கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்..! – சரக்கு வாகனம் மோதி எமன் போல் பறந்து வந்த பேரிகார்டு

 
1

திருப்பத்தூர் மாவட்டம், பால்நாங்குப்பம் கூட்ரோடு பகுதியில் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று சாலையோரத் தடுப்புக் கட்டை (பேரிகார்டு) மீது மோதியதில், அந்தப் பேரிகார்டு தூக்கி வீசப்பட்டு அவ்வழியாக ஸ்கூட்டியில் வந்த பெண்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்கள் நூலிழையில் உயிர் தப்பினர்.

பால்நாங்குப்பம் கூட்ரோடு சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காகப் போலீசாரால் இரும்புப் பேரிகார்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், அப்பகுதி வழியாக அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பேரிகார்டு மீது பலமாக மோதியது.

வாகனம் மோதிய வேகத்தில் அந்த இரும்புப் பேரிகார்டு காற்றில் தூக்கி வீசப்பட்டு, பக்கவாட்டில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்கள் மீது பயங்கரமாகப் பாய்ந்து விழுந்தது. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் ஸ்கூட்டியில் வந்த பெண்கள் நிலைதடுமாறிச் சாலையில் கீழே விழுந்தனர். நல்வாய்ப்பாகப் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, அந்தப் பெண்கள் நூலிழையில் உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.