திருவண்ணாமலை அருகே அரசு பேருந்தும், காரும் மோதி பயங்கர விபத்து- 4 பேர் பலி

திருவண்ணாமலை அருகே காரும் அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின். லாரி உரிமையாளர் மற்றும் லாரி புக்கிங் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 12ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், சைலேஷ்குமார், சரோஷ் உள்ளிட்ட தனது நண்பர்களுடன் காரில் பணி காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு சென்றார். தங்களது பணிகளை முடித்துக் கொண்டு 13-ஆம் தேதி ஆன நேற்று இரவு பெங்களூருவில் இருந்த புறப்பட்டு திருவண்ணாமலை அடுத்த சோ.காட்டுக்குளம் கிராமம் தேசிய நெடுஞ்சாலை வழியாக பாண்டிச்சேரி சென்ற பொழுது, சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்தின் மீது தூக்க கலக்கத்தில் கார் ஓட்டுநர் மோதியதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டாலின் உள்ளிட்ட 4 பேரும் பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்பெண்ணாத்தூர் போலீசார் உடல்களை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனடியாக அவர்கள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த கோர விபத்து அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.