மின்னல் தாக்கி கண் பார்வையை இழந்த சிறுமி! விழுப்புரத்தில் சோகம்
விழுப்புரத்தில் மின்னல் தாக்கியதில் சிறுமி கண் பார்வையை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த இடியுடன் கனமழை கொட்டி வருகிறது. விழுப்புரம் அதனை சுற்றியுள்ள கோலியனூர், வளவனூர், பனங்குப்பம், சகாதேவன் பேட்டை, முண்டியம்பாக்கம், பனையபுரம், விக்கிரவாண்டி, காணை, உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி வருகிறது. இந்த கனமழை காரணமாக வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவுகிறது. மேலும் வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். கன மழையால் விழுப்புரம் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் மழைக்கு நடுவே சோக நிகழ்வாக விழுப்புரம் மாவட்டம் கக்கனூர் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் சிறுமி ஒருவர், தனது கண் பார்வையை இழந்துள்ளார். தென்னை மரத்தில் மின்னல் தாக்கிய போது, வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின. மின்சாதன பொருட்கள் வெடித்த போது வெளிப்பட்ட ஒளியால் 9ஆம் வகுப்பு மாணவியின் பார்வை பாதிக்கப்பட்டது. உடனே சிறுமியை அவரது பெற்றோர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.