சுமார் 11 மணி நேரமாக கொளுந்துவிட்டு எரிந்து வரும் தீ! சென்னையில் பரபரபரப்பு

 
s

மணலி புதுநகர் அருகே எண்ணெய் சேமிப்பு கிடங்கில் சுமார் 11 மணி நேரமாக தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் அடுத்த விச்சூரில் எண்ணெய் கிடங்கில் திங்களன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் ஒரு லட்சம் லிட்டர் வரை பேரல்களில் ஆயில் சேமித்து வைக்கப்பட்ட இந்த எண்ணெய் கிடங்கில் பற்றிய தீயில் பேரல்கள் வெடித்து சிதறுவதால் தீயணைப்பு வீரர்கள் அருகே சென்று தீயை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர். 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த சுமார் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடினர். ஆயில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பேரல்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறி அந்தரத்தில் பறந்தன. 

சுமார் 50 அடி உயரத்திற்கு பேரல்கள் வானத்தை நோக்கி பறந்து தீப்பிடித்து கீழே விழுந்து சிதறின. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலை அருகே சென்று தீயை அணைக்க முற்படும்போது பேரல்கள் வெடித்து சிதறுவதால் அங்கிருந்து பின்னால் விலகிச் சென்று பிறகு மீண்டும் திரும்பி வந்து ரசாயன நுரை கலந்த தண்ணீரை பீச்சி அடித்து கட்டுப்படுத்த முயற்சித்தனர். இதனிடையே எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏறக்குறைய 90% பேரல்கள் எரிந்து விட்டன எனவும், அடுத்த 2மணி நேரத்தில் எஞ்சியுள்ள பேரல்கள் முழுவதுமாக எரிந்து முடிந்த பின்னர் இயந்திரங்களைக் கொண்டு பேரல்களை கிளறி முழுமையாக தீ அணைக்கப்படும் என மாவட்ட தீயணைப்பு அலுவலர் லோகநாதன் கூறினார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு பேரல்கள் முழுவதுமாக வெடித்து சிதறி எரிந்த பின்னர் அவற்றை கிளரி அணைப்பதற்காக காத்திருக்கின்றனர். எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் பற்றிய தீ சுமார் 11 மணி நேரமாக கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இரவு நேரத்தில் எரிந்து முடித்த பின்னர் கிளறிவிட்டு நாளை காலை முழுமையாக தீ அணைக்கப்படும் என தீயணைப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.