பெஞ்சில் அமர்ந்து அழுததற்கே ரூ.2,300 அபராதமா..? – அதிகாரிகளின் செயலால் வெடித்த கடும் விவாதம்!
கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும்போது, யாரும் இல்லாத ஒரு பெஞ்சில் தனியாக அமர்ந்து அழுது மனபாரத்தைக் குறைத்துக் கொள்வது மனித இயல்பு. ஆனால், அப்படி அழுததற்காக ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? ஜெர்மனியின் கெல்சென்கிர்சென் (Gelsenkirchen) நகரில், சிறுவர் பூங்காவின் பெஞ்சில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த 31 வயதுப் பெண்ணுக்கு நகராட்சி அதிகாரிகள் 25 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,300) அபராதம் விதித்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹானா (Hana) என்ற அந்தப் பெண், தனது அத்தையுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டே அந்தப் பூங்காவில் இருந்த பெஞ்சில் அமர்ந்துள்ளார். படிப்புச் சுமை மற்றும் பணப் பிரச்சினைகளால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தம் காரணமாக, அவரால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று நகராட்சி பொது ஒழுங்கு அதிகாரிகள், அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளில் யாராவது உங்களுடையவர்களா என அவரிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு ஹானா 'இல்லை' என்று பதிலளித்ததும், குழந்தைகளுடன் வராத பெரியவர்கள் இந்தப் பகுதியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறி, அவருக்கு உடனடியாக 25 யூரோ (சுமார் ரூ.2,300) அபராதம் விதித்துள்ளனர். கெல்சென்கிர்சென் பொது ஒழுங்குச் சட்டம் பிரிவு 12-ன் படி, 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்காவில் குழந்தைகளைக் கண்காணிக்கும் பெரியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதியை அதிகாரிகள் இதற்குக் காரணமாகக் கூறியுள்ளனர். ஆனால், பூங்காவின் அறிவிப்புப் பலகையில் பெரியவர்கள் பெஞ்சில் அமைதியாக அமரக் கூடாது எனத் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து ஜெர்மன் ஊடகங்களிடம் பேசிய ஹானா, "நான் யாரும் பார்க்காத இடத்தில் தனியாக இருக்க மட்டுமே விரும்பினேன். இங்கு உட்கார அனுமதி இல்லை என்று அவர்கள் சாதாரணமாகச் சொல்லியிருந்தாலே நான் எழுந்து சென்றிருப்பேன். சட்டமும் மனிதநேயமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. அழுதுகொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்தால், முதலில் 'நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? ஏதேனும் உதவி தேவையா?' என்று கேட்பதுதானே மனிதநேயம்?" என வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தாமதக் கட்டணம் மற்றும் சட்டச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக அந்த அபராதத் தொகையைச் செலுத்திவிட்டாலும், அதிகாரிகளின் இரக்கமற்ற அணுகுமுறை தன்னை மிகவும் பாதித்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் வெளியே தெரிந்ததும், அப்பகுதி மக்கள் ஹானாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். அமைதியான இடத்தில் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள அமர்ந்த பெண்ணுக்கு அபராதம் விதித்தது அபத்தமானது என்றும், கடந்த 64 ஆண்டுகளாக அதே பெஞ்சில் பலமுறை ஓய்வெடுத்த தங்களுக்கு இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டதில்லை என்றும் உள்ளூர்வாசிகள் அதிகாரிகளின் செயலுக்குக் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

