மின்சாரம் தாக்கி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை உயிரிழப்பு

 
மின்சாரம்

சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணி கார்த்திக். இவர் இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் அன்னதான கூடத்தில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும் சம்யுக்தா (5 ) என்ற குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை குழந்தை சம்யுக்தா, மணி கார்த்திக் வசிக்கும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் தெருவில் உள்ள மின்சார கம்பத்தை பிடித்து விளையாடிய போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்து உள்ளார்.

இந்நிலையில் மின்சாரம் தாக்கி குழந்தை கீழே விழுவதை பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்கு சேர்த்து நிலையில் குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த இருக்கன்குடி போலீசார் குழந்தையின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே லேசானது முதல் கன மழை பெய்தது. இந்த நிலையில் இருக்கன்குடியில் விபத்து ஏற்பட்ட மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டு ஷாக் அடித்ததாக மின்சார ஊழியருக்கு பலமுறை புகார் அளித்தும் மின்சார ஊழியர்களின் அலட்சியம் காரணமாகவே 5 வயது குழந்தை சம்யுக்தா இறந்ததாக ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்