பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு
பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குபெற்ற பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் உள்ள சுற்று வட்டார 13 கிராம பகுதிகளை ஒன்றிணைந்து 4791 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் பல மாதங்களாக பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். கிராம சபை கூட்டங்களில் 6 முறை விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்றது. அந்த போராட்டத்தில் பங்குபெற்ற பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்துக்கு இடையே போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சவுக்கு சங்கர் மற்றும் ஆதரவாளர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சவுக்கு சங்கரை கைது செய்ய சுங்குவார்சத்திரம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.