திடீரென காணாமல் போன சிறுவன் - கிணற்றில் சடலமாக கிடந்ததால் அதிர்ச்சி
ராசிபுரம் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையின்போது மாயமான 12 வயது சிறுவன் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தேவாலயத்தின் அருகிலுள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து சேலம் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தையொட்டி தீர்க்கதர்ஷன் தேவ சபா என்ற பெயரில் தேவாலயம் உள்ளது. அங்கு மத போதகராக காபிரியல் ரமேஷ் இருந்து வந்தார். மேலும் போலீசாக பணியாற்றி வந்த அவரது மனைவி ஷீலா, கடந்த சில ஆண்டுகளுக்கு விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு தேவாலயத்தை நிர்வகித்து வந்தார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அந்த தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்துள்ளது. அப்போது அங்கிருந்த ரமேஷின் மகன் எலெஜா பிளசன் திடீரென மாயமானார்.
அதைத்தொடர்ந்து ரமேஷ் மற்றும் அங்கிருந்தவர்கள் அக்கம்பக்கத்தில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், தேவாலயத்தின் அருகிலுள்ள கிணற்றில் தவறி விழுந்திருப்பானோ? என்ற சந்தேகத்தில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் டி.எஸ்.பி. விஜயகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தீயணைப்பு துறையினரை வரவழைத்து தேவாலயத்தில் அருகே உள்ள கிணற்றில் சிறுவன் தவறி விழுந்தாரா? என சோதனை செய்தனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 12 வயது சிறுவன் எலஜா பிளசன் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட எலெஜா பிளசனை பரிசோதித்த டாக்டர்கள் குழுவினர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.


