காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்ற இளைஞர் ஜாமீனில் வெளிவந்து தற்கொலை

 
death

சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் காதலியின் கழுத்தை அறுத்துக்கொன்ற நாகையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராமச்சந்திரன்-  சுவேதா

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ராமச்சந்திரன்(வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரி. சென்னை குரோம்பேட்டைராதா நகரை சேர்ந்த மதியழகன் மகள் சுவேதா(21) லேப் டெக்னீசியன். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி சென்னை தாம்பரம் ரெயில் நிலையம் அருகே ராமச்சந்திரனும், சுவேதாவும் பேசிக்கொண்டு இருத்தனர். 

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமச்சந்திரன், தனது காதலியின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். இதில் சம்பவஇடத்திலேயே சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.  கழுத்து அறுபட்ட நிலையில் ராமச்சந்திரன், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் ராமச்சந்திரனை கைது செய்தனர்.  

suicide

குண்டர் தடுப்புசட்டத்தில் கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் 1 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து ஜாமீனில் வெளிவந்தார். மேலும் இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் இருந்துவந்தது. இந்த வழக்கில் நேற்று கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நிலையில், தனது சொந்த ஊரில் இருந்த ராமச்சந்திரன் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த அவரது உறவினர்கள் இதுகுறித்து வலிவலம்போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலைமீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.