நடுரோட்டில் பெண்ணை எட்டி உதைத்து, தாக்கிய பாஜக கவுன்சிலர்

 
வைரல் வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பெண் ஒருவரை பாஜக யூனியன் கவுன்சிலர் காலால் எட்டி மிதித்து தாக்கும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் சொத்து தொடர்பாக பிரச்சினை நிலவி வந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பாஜக யூனியன் கவுன்சிலரான சாவர்க்கர், மெதுகும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் சரோஜாவை தாக்கியதாக தெரிகிறது. 

இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட நிலையில், சரோஜாவை சாவர்க்கர் எட்டி மிதித்து தாக்கும் காட்சியை அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில், சம்பவம் தொடர்பாக களியக்காவிளை போலீசார் சரோஜா அளித்த புகாரின் பேரில் சாவர்க்கர், சசிகுமார், ராஜேஷ், சபிமோள் ஆகிய நால்வர் மீதும், எதிர்த்தரப்பைச் சேர்ந்த சபி மோள் அளித்த புகாரின் பேரில், சரோஜா அவரது கணவர் தாமரேசன், தாணுமாலயன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சாவர்க்கர் தாக்கியதால் காயம் அடைந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சரோஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக சாவர்க்கர் தன்மீது விரோதம் கொண்டு அவ்வப்போது பிரச்சனையில் ஈடுபட்டதாகவும், தற்போது சபி மோளுக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் சாவர்க்கர், தன்னை கொடூரமாக தாக்கியதில் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் எனவே தனக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.