தூத்துக்குடி மக்களுக்கு வரப்போகும் பெரிய ஆபத்து? போர்க்கொடி தூக்கிய பிரேமலதா விஜயகாந்த்!
சட்டப்பேரவை வளாகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “இன்றைய மானியக் கோரிக்கையில் நெசவாளர்களின் மிக முக்கியமான பிரச்சினைகளைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளோம். மேலும், விருத்தாச்சலம் தொகுதியின் கோரிக்கைகள் குறித்தும் பேசியுள்ளேன். விவசாயத்திற்குத் தரும் அதே முக்கியத்துவத்தை நெசவுத் தொழிலுக்கும் வழங்க வேண்டும்.
விவசாயமும் நெசவும் நமது இரு கண்களைப் போன்றவை. ஏற்கெனவே நெய்யப்பட்ட துணிகள் பெருமளவில் தேக்கமடைந்துள்ளன. தற்போது புதிய ரகங்கள் சந்தைக்கு வந்துள்ளதால், தேக்கமடைந்துள்ள பழைய நெசவுப் பொருட்களையும் அரசே முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும்.
தூத்துக்குடியில் புதிய கப்பல் தளம் கட்டுவதால் அங்குள்ள உப்பளத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அரசு இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.
மேட்டூர் அணை திறக்கப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “மேட்டூர் அணையிலிருந்து மிகவும் காலதாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் குறுவை சாகுபடி காலம் முடிந்துவிட்டதால், தற்போதைய சூழ்நிலை விவசாயிகளுக்கு முழுமையான பலனை அளிக்காது. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

