தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது

 
fishing fishing

தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.  

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக  தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.  இந்தக் காலங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. அதன்படி மீன் வளத்தைப் பெருக்கும் விதத்தில்  இந்த காலகட்டத்தில் 61 நாட்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.  அதன்படி தமிழகத்தின் இந்த ஆண்டுக்கான  மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் முதல் ஜூன் 14 வரை  அமலில் இருக்கும்.  

இந்த தடைக்காலத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட  14 தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லமாட்டார்கள்.  சுமார்  15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல்  மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.  இந்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களின் படகுகளை சீரமைத்தல், பராமரித்தல், வலை பின்னுதல் போன்ற பணிகளை செய்வர்.  இதன் காரணமாக அனைத்து விதமான விசைப்படகுகளும் நேற்று மாலை கரைக்கு திரும்பி விட்டன. மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில், மீன்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.