புதுக்கோட்டையில் காளையை அடக்கி ரூ.1 லட்சத்தை தட்டிச் சென்ற 20 வயது இளைஞர்

 
வீரர்

புதுக்கோட்டை அடுத்த வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ராஜவயல், வடமலாப்பூர் குருக்களையாப்பட்டி ஆகிய மூன்று கிராமங்கள் சார்பில் காலை 8-15 மணி முதல் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு மாலை 3.30 மணியுடன் நிறைவடைந்தது.

Image

தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான வாடி வாசலை கொண்ட மாவட்டமாகவும் எண்ணற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்‌ நடைபெறும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை திகழ்ந்து வருகிறது. அதை பறைசாற்றும் விதத்தில் இந்தாண்டில் முதல் ஜல்லிக்கட்டு கடந்த எட்டாம் தேதி தச்சங்குறிச்சியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதியில் விமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அங்கு உள்ள பிடாரி அம்மன் கோயில் திடலில் ராஜவயல், வடமலாப்பூர் குருக்களையாப்பட்டி ஆகிய மூன்று கிராமங்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8.15 மணிக்கு தொடங்கி மாலை 3:30 மணிக்கு நிறைவடைந்தது. 

இந்த போட்டியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் கொடிய அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிக்க வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டில் தமிழ்நாடின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 737 காளைகளும் 141  காளையர்களும் ஆறு சுற்றுகளாக சுழற்சி முறையில் களம் இறக்கப்பட்டனர். மேலும் இதில் ஜல்லிக்கட்டு காளைகள் உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியான காளைகள் மட்டுமே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டது. அதேபோல் காளையர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 

Image

வாடிவாசலிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்படும் காளைகள் துள்ளி குதித்து சீறி பாய்ந்து வரக்கூடிய நிலையில் அதனை  காளையர்கள் தீரத்துடன் தழுவினர். மேலும் இதில் சிறந்த முறையில் காளைகளை தழுவும் வீரர்களுக்கும் வீரர்களின் பிடியில் சிக்காமல் செல்லும் காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணம் வெள்ளிக்காசு பரிசாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் இந்த ஜல்லிக்கட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் கலந்து கொண்டு காளையர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்க தொகையை பரிசுகளாக வழங்கினார். மேலும் இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 250 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுகாதார துறையினர் வருவாய் துறையினர், கால்நடைபராமரிப்புத் துறையினர்‌, தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறையினரின் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மேலும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.


புதுக்கோட்டை அடுத்த வடமலாப்பூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் வடமலாப்பூர் தன்னிலவன் கல்லுபட்டறை என்ற பெயரில் செவலை காளை அவிழ்க்கப்பட்ட நிலையில், அந்த காளைக்கு காளையின் உரிமையாளர் சார்பில் ஒரு லட்சம் பரிசு அறிவித்த நிலையில் அந்த காளையை அன்னவாசல் பகுதியை சேர்ந்த 11 எண் கொண்ட டி சர்ட் அணிந்திருந்த மோகன் என்ற 20 வயது வீரர் தழுவி ஒரு காளையின் உரிமையாளர் அறிவித்த பரிசை வென்றது அசத்தி உரிமையாளருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். பின்னர் அவருக்கு காயம் ஏற்பட்டதால் களத்திலிருந்து வெளியேறினார்.