ஓடும் ரயிலில் 2 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய மிட்டாய்... போராடி காப்பாற்றிய காவலர்
கோவை மேட்டுப்பாளையம் - போத்தனூர் மெமோ ரயிலில் வந்த 2 வயது சிறுவன் தொண்டையில் சிக்கிய மிட்டாயை வெளியே எடுத்து உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூர் வரை இயக்கப்படும் மெமோ ரயிலில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று மதியம் ஒரு மணியளவில் கோவை நோக்கி வந்த ரயிலில் தேவ் ஆதிரன் (2) என்ற சிறுவன் தனது தாயுடன் வந்துள்ளார். அப்போது கோவை அருகே வந்தபோது சிறுவன் தேவ் ஆதிரன் சாப்பிட்டுக் கொண்டிருந்த மிட்டாய் அவனது தொண்டையில் சிக்கியது.
இதையடுத்து சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, மூக்கில் ரத்தம் வலிய ஆரம்பித்தது. இதையடுத்து சிறுவனின் தாய் கூச்சலிடவே அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த ரயில்வே போலீசார் சிறுவன் தொண்டையில் சிக்கியிருந்த மிட்டாயை அகற்றினர். இதையடுத்து சிறுவனை சமாதானப்படுத்திய போலீசார் கோவை வந்ததும், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடல்நலம் சீராக உள்ளது எனக் கூறியதை தொடர்ந்து சிறுவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

