கடல் அடியில் இருந்த 7000 கிலோ குப்பைகளை அள்ளிய 12 வயது சிறுமி..!

 
1

​சென்னை காரப்பாக்கம் சேர்ந்தவர் தாரகை ஆராதனா(வயது 12). சிறு வயது முதலே ஆழ்கடல் நீச்சல் மீது ஆர்வம் கொண்ட இவருக்கு, பிரபல ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் அரவிந்த் முறையான பயிற்சி அளித்து வருகிறார். பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு ஆராதனா ஆழ்கடலில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறார்.

​கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மீனவர்கள் விட்டுச்செல்லும் சேதமடைந்த வலைகளில் சிக்கி, எண்ணற்ற அரிய கடல்வாழ் உயிரினங்கள் அன்றாடம் உயிரிழக்கின்றன. இந்த பேராபத்து குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுமி ஆராதனா முடிவு செய்தார்.

​இதற்காக சென்னை நீலாங்கரை கடல் பகுதியில், ஆழ்கடல் நீச்சல் உபகரணங்களுடன் ஆராதனா கடலுக்குள் இறங்கினார். ​கடலுக்கு அடியில் சுமார் 12 மீட்டர் (சுமார் 40 அடி முதல் 60 அடி வரை) ஆழத்திற்குச் சென்று, அங்குள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை சேகரிக்கும் துப்புரவுப் பணியை மேற்கொண்டார்.

கடல் பரப்பில் ஆங்காங்கே சிதறிக் கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் மற்றும் கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் என சுமார் 7,000 கிலோ கழிவுப் பொருட்களைத் தனது விடாமுயற்சியால் இதுவரை சேகரித்துக் கரைக்குக் கொண்டு வந்துள்ளார்.

பல ஆண்டுகளாக இந்த பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதுவரை சுமார் 7,000 கிலோ நெகிழிப் பொருட்களை வெளியே எடுத்து வந்துள்ள சிறுமி, நேற்று முன்தினம் இந்த பணியில் ஈடுபட்டபோது சுமார் 500 கிலோ நெகிழி பொருட்களை வெளியில் கொண்டு வந்துள்ளார்.

​ஆழ்கடல் சுற்றுச்சூழலைக் காக்க 12 வயதே ஆன சிறுமி தாரகை ஆராதனா மேற்கொண்டுள்ள இந்த அசாத்திய முயற்சிக்கும் சாதனைக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.