மின் கம்பியில் விழுந்த துணியை எடுத்தபோது விபரீதம்... மின்சாரம் தாக்கி 12 வயது சிறுமி பலி
மதுரை மாவட்டம் சோழவந்தானில் வீட்டு மாடியில் துணியை உலர்த்தச் சென்ற பள்ளிச் சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் துளசி - தேவி தம்பதியினர். துளசி சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தின் காரணமாக கை கால்கள் செயல்படாமல் வீட்டிலேயே உள்ள நிலையில் அவரது மனைவி தேவி அங்குள்ள அரசு பள்ளி விடுதியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது குழந்தையான சுபாஷ் ஸ்ரீ வயது(12). இவர் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்
இந்நிலையில் பள்ளி விடுமுறை நாளான இன்று துணிகளை துவைத்து காய வைப்பதற்காக மாடிப்படியின் கைப்பிடி கம்பியில் கை வைத்துள்ளார். அப்போது அருகில் சென்ற மின்சார கம்பியில் துணிபட்டு சுபாஸ்ரீ மீது மின்சாரம் பாய்ந்தது. அப்போது அருகிலிருந்த அவரது சகோதரி சித்திரகலா மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சுபாஸ்ரீயை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுபாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சோழவந்தான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றிட வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


