மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர்கள், முதல்வர்கள் பணியிட மாற்றம்

 
Tamilnadu arasu

தஞ்சை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் உள்ளிட்டோரை பணியிட மாற்றம் செய்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். 

தஞ்சை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அறிவுடைநம்பி, திண்டிவனம் கலைக் கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் எழிலன், தஞ்சை மண்டல இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் குடியாத்தம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ராமலட்சுமி, தருமபுரி மண்டல இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக 3 பேரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பான அரசானையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசாணையில் ஆணையிடப்பட்டவாறு மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர், அரசு கலைக் கல்லூரி (நிலை-i) முதல்வர் தற்போது பணியாற்றும் அலுவலகம்/ கல்லுரியிலிருந்து உடன் பணி விடுவிப்பு பெற்று புதிய இடத்தில் பணியேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தற்போது பணியாற்றும் - அலுவலகம்/ கல்லூரியிலிருந்து அரசாணையில் உள்ளவாறு தமது பொறுப்புகளை அலுவலகம்/ கல்லூரியில் பணியாற்றும் அலுவலர் / மூத்த இணைப்பேராசிரியரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து பணி விடுவிப்பு பெற்று உடன் புதிய இடத்தில் பணி ஏற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பணி விடுவிப்பு மற்றும் பணி சேர் அறிக்கைகளை மின்னஞ்சல் மூலம் உடன் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். துய்க்காத பணியேற்பிடைக் காலத்தினை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்ப்பதற்கான தமது விண்ணப்பத்தினை உடனடியாக கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இச்செயல்முறைகளை பெற்றமைக்கான பெறல் ஏற்பினை மறுஅஞ்சலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.