யூடியூபர் கிஷோர் கே.சாமி கைது.. அண்ணாமலை கண்டனம்..

 
யூடியூபர் கிஷோர் கே.சாமி கைது.. அண்ணாமலை கண்டனம்..


சமூக ஊடகவியலாளரான கிஷோர் கே. சாமியை, புதுச்சேரியில் வைத்து  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சமூக ஊடகவியலாளரும், பாஜக ஆதரவாவளருமாக இருந்து வருபவர்  கிஷோர் கே. சாமி. இவர் கடந்த நவம்பர் 1ம் தேதி,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மழை வெள்ளப் பாதிப்பு பணிகளை விமர்சிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டார்.  இது தொடர்பாக கிஷோர் கே சாமி மீது  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்காக ஆஜராகும்படி  நவம்பர் 5, 7, 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் என  பலமுறை  நோட்டீஸ்கள் அனுப்பியும் அவர் ஆஜராகமல் இருந்துள்ளார்.  இதனிடையே, முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும்  கிஷோர் கே. சாமி மனுதாக்கல் செய்தார்.

Annamalai

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, விசாரணைக்கு ஆஜராகும்படி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகாதவருக்கு முன்ஜாமீன் வழங்கினால், நீதிமன்றம் இந்த சமூகத்திற்கு தவறான தகவலை தெரிவிப்பதாகி விடும் என்று கூறி, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  இந்நிலையில், புதுச்சேரியில் தங்கியிருந்த கிஷோர் கே.சுவாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருக்கின்றனர்.  

அவரது கைதுக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கிஷோர் கே சாமி அவர்களின் கைதை பாஜக  வன்மையாக கண்டிக்கிறது. தேசியவாதிகளின் குரல்வளையை நசுக்கி அவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் இந்த திமுக  அரசு, பாஜக  பெண் தலைவர்களை இழிவாக பேசிய திமுக பேச்சாளரை கைது செய்யாமல் இருப்பது ஏன்? கிஷோர் கே சாமி அவர்களின் தந்தையாரிடம் உரையாடி, தேவையான சட்ட உதவிகளை பாஜக  செய்யும் என்ற உத்தரவாதத்தை அளித்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.