தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழும காவலர்களுக்கு முதல்வர் வாழ்த்து!!

 
tn

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலினை  இன்று  தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்த காவலர்கள் பாய்மரப் படகுகள் மூலம் சென்னையிலிருந்து இராமேஸ்வரம் சென்று மீண்டும் சென்னை வந்தடைந்து உலக சாதனை படைத்ததற்காக சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மேலும், இச்சாகசப் பயணம் மேற்கொண்டதற்காக தமிழ்நாடு காவல்துறையின் கடலோர பாதுகாப்புக் குழுவிற்கு உலக சாதனை புத்தகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழை, முதலமைச்சர் அவர்களிடம் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் காவல்துறை இயக்குநர் முனைவர் சந்திப் மித்தல், இ.கா.ப., அவர்கள் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

govt

மீனவர்களிடையே கடலோர பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுமத்தைச் சோந்த 21 காவலர்கள் மூன்று J- 80 கிளாசிக் பாய்மரப் படகுகள் மூலம் 9.7.2022 அன்று சென்னையில் இருந்து புறப்பட்டு இராமேஸ்வரம் சென்று, சுமார் 540 கடல் மைல் தூரம் பயணம் செய்து மீண்டும் 17.7.2022 அன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தனர். இந்த "மரைன் போலீஸ் பாய்மரப் படகுப் பயணம் - 2022" இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ராயல் மெட்ராஸ் யாச்ட் கிளப்புடன் (RMYC) ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

cm stalin

இப்படகோட்ட பயணத்தின் நோக்கமானது, தமிழ்நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதியில் பாதுகாப்பான சூழ்நிலையை உறுதிப்படுத்துதல், கடலோரப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்க மீனவ மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மீனவர்களுக்கு கடலோரப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பற்றி தெரியப்படுத்துதல், கடலோரப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை பற்றி தெரிவிப்பதற்கு பாதுகாப்புக் குழுமத்தில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1093 குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியன ஆகும். இச்சாசகப் பயணம், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தேசிய படகோட்டம் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அதிகாரம் பெற்ற தேசிய அமைப்பான இந்திய பாய்மரப் படகுச் சங்கத்தின் அதிகாரப் பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளத்துடன், உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. இச்சாதனை நிகழ்த்திய உலகின் முதல் காவல் படை என்ற பெருமையை தமிழ்நாடு காவல்துறை பெற்றுள்ளது.