கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி தலைமறைவு

கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். குடும்பத் தகராறில் கணவன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி விட்டு தலைமறைவாக இருக்கும் மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அடுத்த கருங்குளம். இப்பகுதிக்கு அருகே உள்ள கீழ நட்டார் குளம் பகுதியில் வசித்து வருபவர் திருப்பதி ராஜா. 28 வயதான இந்த இளைஞர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மனைவி வசந்தி. இத்தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கணவன், மனைவிக்கு இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு இருந்து வந்திருக்கிறது. நேற்று முன்தினம் மாலையில் வசந்தி சமையல் செய்து கொண்டு இருந்திருக்கிறார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த வசந்தி, சமைத்துக் கொண்டிருந்த எண்ணெயை எடுத்து கணவர் மீது ஊற்றி இருக்கிறார்.
கொதிக்கும் எண்ணெயை எடுத்து ஊற்றியதால் அலறி துடித்திருக்கிறார் திருப்பதி ராஜா. அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்திருக்கிறார்கள்.
இதற்குள், விபரீதம் ஆகிவிட்டது என்பதை உணர்ந்த வசந்தி அங்கிருந்து தலைமறைவாகி இருக்கிறார்.
அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து திருப்பதி ராஜாவை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். அங்கு திருப்பதி ராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பதி ராஜாவின் உறவினர்கள் செய்துங்க நல்லூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வசந்தி மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
கணவன், மனைவிக்கு இடையேயான சண்டையில் கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றிய மனைவியின் செயல் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.