" பாஜக வாக்குகளைப் பெற ஆம் ஆத்மி கட்சி பல்டி அடிக்கிறது" - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!!

 
ks alagiri

ஆம் ஆத்மி ஏன் பாஜக பி டீம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது  என்று  கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். 

aravind

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இனி புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி, மறுபக்கம்   லக்‌ஷ்மி, விநாயகரின் படங்களை அச்சடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், நம் ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லக்‌ஷ்மி படங்களை அச்சிட்டால் நிச்சயமாக தேசம் வளர்ச்சி காணும். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு நான் ஓரிரு தினங்களில் கடிதம் எழுதுவேன். முஸ்லிம் தேசமான இந்தோனேசியாவின் ரூபாய் நோட்டில் விநாயகர் படம் இருக்கிறது. அவர்களால் முடியுமென்றால் ஏன் நம்மால் முடியாது. ஆகையால், இனி புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி, மறுபக்கம் கடவுளர் லக்‌ஷ்மி, விநாயகரின் படங்களை அச்சடிக்கலாம். இந்தியா வளமான நாடாக இருக்கவே விரும்புகிறேன் என்று கூறினார். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக வாக்குகளைப் பெற ஆம் ஆத்மி கட்சி பல்டி அடிக்கிறது. பல வருடங்களாக நாம் தெய்வங்களை வேண்டிக்கொண்டிருக்கிறோம், அதுவே போதுமானது. ரூபாய் நோட்டில் போடச் சொல்வது மூடநம்பிக்கை. மகாத்மா காந்தி புகைப்படம் மட்டுமே இருக்க வேண்டும். ஏன் பாஜக பி டீம் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது? என்று பதிவிட்டுள்ளார்.