மதுரை திருமங்கலம் பாதாள சாக்கடை திட்டம் என்ன ஆச்சு?? - பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்..

 
அமைச்சர் கே.என்.நேரு

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு பரிசீலனை செய்து வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன் தினம் அளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் இன்றைய (ஜன.11) கூட்டத்தில்,  கேள்வி நேரத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயக்குமார், மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “திருமங்கலம் நகராட்சி முதல் நிலை நகராட்சியாகும்.

தமிழக அரசு

 தற்போது 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். 19 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. திருமங்கலத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த ரூ.400 கோடி செலவு ஆகும். இதை பராமரிக்கும் அளவுக்கு அந்த நகராட்சிக்கு வருவாய் இருக்க வேண்டும். எனவே திருமங்கலத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது. நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதேபோல், மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கோ.தளபதி, மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் மாற்றி அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதிலளித்த அமைச்சர், “தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ளது. இதில் 19 மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஓசூர் மற்றும் சிவகாயில் விரைவில் இந்த பணிகள் தொடங்க உள்ளது. மதுரையில் ரூ.500 கோடி பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே ஏற்கெனவே உள்ள குழாய்களை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்..