இதற்காக எப்பாடு பட்டாவது வென்றே தீருவோம்.. - ராமதாஸ் உறுதி..

 
ramadoss

வன்னியர்களக்கான இடஒதுக்கீட்டை பெறுவதில் எப்பாடு பட்டாலும் வென்றே தீருவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வன்னிய சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்து அவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற உன்னத நோக்குடன் தான் பிரிந்து கிடந்த அமைப்புகளையெல்லாம் ஒன்று திரட்டி, வன்னியர் சங்கத்தை கட்டமைத்தோம்.  பின்னர் வன்னியர் சமுதாயத்திற்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இதையடுத்து, 2020-ம் ஆண்டு நடத்திய போராட்டத்திற்கு பிறகு 2021-ம் ஆண்டு 10.50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டு வந்தது.

வன்னியர் இடஒதுக்கீடு

இதையடுத்து, சில அமைப்புகள் தொடங்கிய வழக்கில் உள் இடஒதுக்கீடு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பின்னர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நானே மேல்முறையீடு செய்தேன். தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு மீண்டும் உயிர்கொடுக்க போராடியது. உச்சநீதிமன்றமும் நமது மேல்முறையீட்டு மனுக்களை ஆய்வு செய்து, வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் முன்வைத்திருந்த 7 காரணங்களில் 6 காரணங்கள் தவறானவை என்று தீர்ப்பளித்தது.

இட ஒதுக்கீடு

பின்னர் இந்த வழக்கு உச்சநீதிமன்றம் சென்று ஐந்தரை மாதங்களை கடந்துவிட்டது என சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், கடந்த 10 மாதங்களில் அறிவிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளிலும் வன்னியர் இட ஒதுக்கீடு இல்லை என்ற உங்களின் கவலைக்குரல்கள் எனக்கு தெரியும்.வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்பாடுபட்டாவது வெகுவிரைவில் வென்றேடுத்தே தீருவோம். இந்த உணர்வுடன் நமது சமூகநீதி நாளான நாளை (செப்டம்பர் 17) நமது இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும். அனைவரும் அவர்களின் வீட்டு முன்பு இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்ற பதாகையை அமைத்து வீர வணக்கம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.