மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..

 
சூறைக்காற்று

தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.  

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய  வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில்  தமிழக,  புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும், அடுத்த இரு தினங்களில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து செல்லக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.  

மீனவர்கள்

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில்,  “11.11.2022 மற்றும் 12.11.2022: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய  குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும்  அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

13.11.2022: குமரிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள்,  தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும்  கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

கடல் சீற்றம்

14.11.2022: லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு மற்றும்  அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும்  கேரள கடலோரப்  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

15.11.2022: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால்  மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளது.