சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை - ஏன் தெரியுமா?

 
airport

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கடுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பு நேற்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 30ம் தேதி நள்ளிரவு வரை பாதுகாப்பு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்பகுதிகளில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் ரோந்து பணி, முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல விமான நிலையத்தினை சுற்றிலும் 24 மணிநேரமும் ரோந்து பணி மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு, மோப்பநாய் பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதைப்போல் விமான நிலையத்திற்கு உள்ளே செல்வதற்கான பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் ஏற்கனவே உள்ள கண்காணிப்பு கேமராக்களுடன் தற்போது கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை அமைத்து, விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். இதைப்போல் விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை, விமானங்களில் ஏறும் இடத்தில் பயணிகளுக்கு, பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது.