விநாயகர் சதுர்த்தி : பாதுகாப்பு பணியில் 900 எஸ்.ஐக்கள், 10 ஆயிரம் பயிற்சி காவலர்கள்..

 
dgp sylendra babu


விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்துமாறு  காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விநாயகர்

நாடு முழுவதும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு  விநயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நிலையில்  விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை தமிழகத்தில் அமைதியாக நடத்துவது தொடர்பாக தமிழக காவல் துறை  டிஜிபி  சைலேந்திர பாபு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.   சென்னை டிஜிபி அலுவலகத்தில் காணொளி வாயிலாக நேற்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில்,   அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

இந்தக் கூட்டத்தில், அரசு வகுத்துள்ள வழிமுறைகளின்படி விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதிப்பது, நிறுவப்பட்ட சிலைகள் கரைக்கப்படும் வரை முறையாக  பாதுகாப்பு அளிப்பது, விநாயகர்  சிலைகள் ஊர்வலத்தை அமைதியான முறையில் நடத்துவது, கடலில் ஒதுக்கப்பட்ட  இடங்களில் சிலைகளை கரைப்பது  போன்றவை குறித்து   விரிவான அறிவுரைகளை டிஜிபி சைலேந்திர பாபு வழங்கினார்.   மேலும்,  எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம்  தடுக்க வேண்டும் என்றும்,  பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்துமாறும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இந்த விநாயகர் சதுர்த்தி பாதிகாப்பிற்காக  மாவட்ட காவல் துறையினருக்கு உறுதுணையாக  ஆயுதப்படைக் காவலர்கள்,   10,000 பயிற்சி காவலர்கள்,  தற்போது பயிற்சி முடித்துள்ள 900 உதவி ஆய்வாளர்கள்,  ஊர்க்காவல் படையினர் ஆகியோரை ஈடுபடுத்தவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.