முதலமைச்சர் தொகுதியான கொளத்தூரில் வீடுகளுக்குள் வெள்ளம்-விடிய விடிய மக்கள் அவதி

 
vijayakanth

முதலமைச்சர் தொகுதியான சென்னை கொளத்தூரில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் விடிய விடிய தூங்காமல் மக்கள் தவித்தனர், மழை நீரை வெளியேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், அதிகாரிகள்,அமைச்சர்கள் வந்து பார்வையிடவில்லை எனவும் மக்கள் குமுறுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Image

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. ஒருநாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளாத்தில் தத்தளிக்கிறது. குறிப்பாக முதலமைச்சர் தொகுதியான சென்னை கொளத்தூரில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் விடிய விடிய தூங்காமல் மக்கள் தவித்தனர், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புதுந்துள்ளதால் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். சென்னையில் ஒருபுறம் மெட்ரோ, மறுபுறம் மழைநீர் வடிகால் பணிகள் என ஏற்கனவே சென்னை மாநகரம் முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் பாய்ந்து ஓடுகிறது. 

உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல தற்போது பெய்து வரும் மழையால் சென்னை மாநகர மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.  சென்னை மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், மழை நீரை அகற்றவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் வடியாத இடங்களில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.