சென்னையில் வெள்ளம்- நேற்று குற்றச்சாட்டு இன்று பாராட்டு! விஜயகாந்த் வினோதம்

 
பேனா வைக்க நிதி இருக்கும்போது?.. தீபாவளி போனஸ் வழங்க நிதி இல்லையா??  - விஜயகாந்த் கேள்வி..

எதிர்க்கட்சிகள் சுட்டிகாட்டியதற்கு இணங்க, சென்னையில் தேங்கிய மழை நீரை துரித நடவடிக்கை மேற்கொண்டு அகற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மழைநீர் அகற்றம்

தமிழகத்தில் கடந்த 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்றிலிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனை சுட்டிக்காட்டி விஜயகாந்த் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ள நீரில் தத்தளிக்கிறது. வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் பாய்ந்து ஓடுகிறது. 

முதலமைச்சர் தொகுதியான சென்னை கொளத்தூரில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் விடிய விடிய தூங்காமல் மக்கள் தவித்தனர்.மழை நீரை வெளியேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், அதிகாரிகள்,அமைச்சர்கள் வந்து பார்வையிடவில்லை எனவும் மக்கள் குமுறுகின்றனர்.தேங்கியுள்ள மழை நீரை அகற்ற தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார். 

இந்நிலையில் இன்று விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில், “வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் சென்னை தியாகராயநகர், வியாசர்பாடி, பெரம்பூர், கொளத்தூர் மற்றும் சுரங்கப்பாதைகள், சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை உடனடியாக ராட்சத இந்திரங்களை கொண்டு அகற்றிய அரசுக்கு பாராட்டுக்கள்.. எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியதற்கு இணங்க, சென்னையில் தேங்கிய மழை நீரை துரித நடவடிக்கை மேற்கொண்டு, ராட்சத இயந்திரங்கள் கொண்டு மழைநீரை அகற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.