பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - தமிழக காவல்துறைக்கு வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

 
venkaiah naidu

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில், தமிழக காவல் துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாடு காவல்துறைக்கு  குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடி வழங்கும் விழா,  சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நடைபெற்ற இந்த விழாவில்  துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.   இந்த விழாவில்  ‘குடியரசு தலைவர் கொடியை’ துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு  தமிழ்நாடு காவல் துறைக்கு வழங்கினார்.   குடியரசு தலைவர் கொடியை தமிழக காவல்துறை முதல்வர் பெற்றுக்கொண்டு , டிஜிபி சைலேந்திரபாபுவிடம் வழங்கினார்.  இந்த விழாவில் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.  

cm

இதனை தொடர்ந்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை காப்பதில் காவல் துறை முன்னோடியாக உள்ளது. விலைமதிப்பற்ற 10 சிலைகளை வெளிநாடுகளிலிருந்து தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர். கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில், காவல் துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிக அளவில் நடைபெறும் சைபர் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.