"மியான்மரில் கடத்தி செல்லப்பட்ட தமிழர்கள்" - மத்திய, மாநில அரசுகளுக்கு வேல்முருகன் கோரிக்கை!!

 
ttn

மியான்மரில் கடத்தி செல்லப்பட்ட தமிழர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாய்லாந்து நாட்டில் வேலை ஏற்படுத்தி தருவதாக கூறி, தமிழ்நாடு, புதுச்சேரி தமிழர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மியான்மர் நாட்டிற்கு மாஃபியா கும்பல்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. கடத்தப்பட்ட தமிழர்கள், மியான்மார் நாட்டில் உள்ள மியாவாடி என்கிற எல்லைப் பகுதியில் சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றும் ஆயுதம் தாங்கிய கும்பல்கள் தாய்லாந்து எல்லை மூலம் ஆள்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

vel

இந்தியாவில் வேலையின்மையை எதிர்க்கொண்டு வரும் நன்கு படித்த இளைஞர்கள், கல்விக் கடனை செலுத்தவும், குடும்பத்தை காப்பாற்றவும் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர். பொறியியல் படித்த மாணவர்கள், இளங்கலை, முதுகலை பயின்ற மாணவர்கள், துப்புரவு பணிக்கு விண்ணப்பிப்பதும், சென்னை போன்ற பெரு நகரங்களில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவதும் சமீப காலமாக அதிகரித்துள்ளது.இந்தச் சூழலை பயன்படுத்தி, வெளிநாட்டில் வேலை தருவதாக கவர்ச்சி விளம்பரங்கள் செய்யும் புரோக்கர்கள், ஏஜெண்ட்டுகள், தமிழ்நாடு, புதுச்சேரி இளைஞர்களை, நல்ல வேலை, நல்ல ஊதியம் வாங்கி தருவதாக கூறி, தாய்லாந்து நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.ஆனால், அவர்களை மியான்மர் நாட்டில் உள்ள மியாவாடி என்ற பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத பணிகளைச் செய்ய நிர்ப்பந்தம் செய்து, அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் வெளியிட்டுள்ள வீடியோவின் வாயிலாக, தமிழர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதையும், கடுமையாக அடித்து உதைத்து துன்புறுத்தப்பட்டிருப்பதும் அறியலாம்.

ttn

பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, செய்வதறியாமல் தவிக்கும் பெற்றோர்களும் தங்கள் கையறு நிலையை வெளிப்படுத்தி உதவி கேட்பதை ஊடகங்களில் பார்க்கும் போது, நெஞ்சம் பதைபதைக்கிறது.
எனவே, தமிழ்நாடு அரசும், இந்திய அரசும், துரிதமாக செயல்பட்டு மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட  இந்திய இளைஞர்களை பாதுகாப்புடன் மீட்பதோடு,  இச்சம்பவத்திற்கு காரணமான புரோக்கர்களையும், ஏஜெண்ட்களையும், கடத்தல் கும்பலையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.