என்.எல்.சிக்கு நிலம் கையகப்படுத்த வந்தால்.., மாபெரும் போராட்டம் வெடிக்கும் - வேல்முருகன் எச்சரிக்கை..

 
velmurugan

என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்த முயன்றால் , மாபெரும் போராட்டம் வெடிக்கும் என  தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் எச்சரித்துள்ளார்.  

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும், கொடுக்க இருப்போருக்கும் உரிய இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை வழங்க வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நீண்ட நெடிய நாட்களாக, குரல் எழுப்பியும், போராடியும் வருகிறது. பொதுமக்கள், விவசாயிகளிடம் எடுத்த, எடுக்கப்பட உள்ள நிலங்களுக்கு, ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். வீட்டுமனைக்கு வகைப்பாடு வித்தியாசமின்றி ஒரு செண்டுக்கு 5 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மாற்றுமனை குறைந்தபட்சம் 20 செண்டும் வழங்க வேண்டும்.

 என்.எல்.சி நிறுவனம்

வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு என்எல்சியில் நிரந்தர வேலையும், வேலை பெற விரும்பாதவர்களுக்கு  ரூ. 50  லட்சம்  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி, ஆர்ப்பாட்டத்தை, சமீபத்தில் கூட அனைத்து கட்சிகளின் சார்பில் எனது தலைமையில் முன்னெடுத்திருந்தேன். இதனை கருத்திக்கொள்ளாமல், என்.எல்.சி நிர்வாகம், அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளகளை மட்டும் அழைத்து, வடலூரில் உள்ள மங்கையர்கரசி மண்டபத்தில் ஆலோசனை கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்தியுள்ளது ஏற்புடையதல்ல. இக்கூட்டத்திற்கு விவசாயிகளை அழைக்காததால், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான நானும், நிர்வாகிகளும், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம்.

என்.எல்.சிக்கு நிலம் கையகப்படுத்த வந்தால்.. மாபெரும் போராட்டம் வெடிக்கும்  - வேல்முருகன் எச்சரிக்கை.. 

இக்கூட்டம் நடப்பதை அறிந்து வந்த ஏராளமான விவசாயிகளை அனுமதிக்காமல், ஆங்காங்கே காவல்துறையை வைத்து மிரட்டியதும், விவசாயிகள் வந்த வாகனங்களை நிறுத்தி, சாவிகளை பறிமுதல் செய்ததும் ஏற்றுக்கொள்ள முடியாது.   இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, விவசாயிகளுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதனை மீறி, காவல்துறை, என்எல்சி நிர்வாகத்தை வைத்துக்கொண்டு, மாவட்ட நிர்வாகம், நிலத்தை கையகப்படுத்த வந்தால், பாதிக்கப்பட்ட கிராம மக்களையும், விவசாயிகளையும் ஒன்று திரட்டி, மாபெரும் போராட்டம் வெடிக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.