தவறுகளை ஆளுநர் உடனுக்குடன் கண்டுபிடிப்பதால் திமுகவிற்கு வருத்தம்- வானதி சீனிவாசன்

 
Vanathi seenivasan

எல்லா உண்மைகளையும், தவறுகளையும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடனுக்குடன் கண்டுபிடித்து விடுவதாலயே ஆளுநரை திரும்ப பெறுமாறு திமுக எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் மனு அளித்துள்ளதாக பா.ஜ.க. மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும் என, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஜனாதிபதி அலுவலகத்தில் மனு அளித்துள்ளன. தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது, சென்னா ரெட்டி, சுர்ஜித்சிங் பர்னாலா ஆகியோர் வாயிலாக, அன்றைய அ.தி.மு.க., அரசுக்கு அவர்கள் கொடுத்த நெருக்கடிகளை யாரும் மறக்கவில்லை. கவர்னர், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாதவராக இருக்கலாம். ஆனால், அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் பிரதிநிதி என்பதை மறந்து விடக்கூடாது. 'சமுதாயத்தை பிளவுபடுத்தும் நோக்கிலான, மத ரீதியான கருத்துகளை பொது வெளியில் கவர்னர் பேசி வருகிறார்' என்று மனுவில் கூறியுள்ளனர்.  'திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பாதிரியார் ஜி.யு.போப், அதிலுள்ள ஆன்மிகம் என்ற ஆன்மாவை தவிர்த்து விட்டார்' என கவர்னர் கூறியிருக்கிறார். இதற்காக கொந்தளிக்கும் தி.மு.க.வினர் திருக்குறள் பற்றி ஈ.வெ.ரா. கூறியதை ஒருமுறை படித்து பார்க்க வேண்டும். 

vanathi--srinivas-3

கவர்னரின் பேச்சில், தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லையெனில் ஜனநாயக ரீதியில் பதில் அளிக்கலாம். அதைவிடுத்து அவரை நீக்குமாறு கோருவது தி.மு.க.வுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. எல்லா உண்மைகளையும், தவறுகளையும், கவர்னர் உடனுக்குடன் கண்டுபிடித்து விடுகிறார். அதை மத்திய உள்துறை அமைச்சர், பிரதமருக்கு உடனுக்குடன் சொல்லி விடுகிறார் என வருத்தம் இருக்கலாம். அதனால், தி.மு.க.வினருக்கு இழப்பும் ஏற்பட்டிருக்கலாம். எனவே அவரை நீக்குமாறு ஜனாதிபதியிடம் மனு அளித்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்