அய்யகோ! தமிழ்ச்சங்கத்தின் ஏடொன்று எரிந்துபட்டதே - வைரமுத்து

 
an

தமிழறிஞர் அவ்வை நடராஜன்(85) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

 தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர் அவ்வை நடராஜன். திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில்  1936 ஆம் ஆண்டில் பிறந்தவர் அவ்வை நடராஜன்.   மதுரை தியாகராயர் கல்லூரி,  தஞ்சாவூரில் சரபோஜி அரசு கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராக பணிபுரிந்தவர்,  டெல்லியில் அகில இந்திய வானொலி நிலையத்தின் செய்தி வாசிப்பாளர்,   அறிவிப்பாளர் என்று பணிபுரிந்துள்ளார்.   சென்னையில் காந்தி இராமலிங்கர் பணி மன்றத்தின் செயலாளராக இருந்திருக்கிறார்.   இவரின் தமிழ் புலமையை பார்த்து விட்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் இவரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையில் துறை இயக்குனராக பணி அமர்த்திருக்கிறார்.

an

வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலகுறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.  அவ்வை நடராஜன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   இதுகுறித்து கவிஞர் வைரமுத்து,

அய்யகோ!

அறிஞர் அவ்வை நடராசன்
மறைந்தாரே!

தமிழ்ச்சங்கத்தின்
ஏடொன்று எரிந்துபட்டதே

அகிலம் தழுவி வீசிய
தமிழ்த்தென்றல்
தன் வீச்சையும் மூச்சையும்
நிறுத்திவிட்டதே

பட்டிமன்றம்
பொட்டிழந்துவிட்டதே

இனி என்னோடு
தனித்தமிழில் உரையாட
எவருளார்?

பேசுதமிழ் உள்ளவரை
உங்கள் பெருமை
வாழும் பெரும!
- என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.