ஆகஸ்ட் 7ல் சென்னையில் 2,000 இடங்களில் தடுப்பூசி முகாம்..

 
கொரோனா தடுப்பூசி


சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை 2,000 இடங்களில்   கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி

நாடு முழுவதும் தொற்று கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் படிப்படியாக குறைந்து வந்த நிலையில்,  தற்போது மீண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது.  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன்,  தொடர்ந்து விழுப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது.  பொது இடங்களில் சமூக இடைவெளி, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  அந்தவகையில்,  தமிழகத்தில்  தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.   வார இறுதி நாட்களில்  இதுவரை  32 தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண் (கோப்புப்படம்)

இந்நிலையில்,  33வது கொரோனா மெகா தடுப்பூசி  முகாம் வருகிற  ஞாயிற்றுக்கிழமை ( ஆகஸ்ட் 7ம் தேதி ) நடைபெறவுள்ளது.  அந்தவகையில் சென்னை மாநகராட்சி சார்பில் 2,000 இடங்களில் வரும் முகாம்  நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது வரை 4,34,244 நபர்கள் மட்டுமே முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். சென்னையில் தகுதியுடைய முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களைப் பொறுத்தவரையில் 43,63,475 பேர் உள்ளனர். சென்னையில் இதுவரை நடைபெற்ற 32 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 40,34,207 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை 33வது மெகா தடுப்பூசி முகாம் 2,000 இடங்களில் நடைபெற உள்ளது” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.