தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்..

 
தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்

 தமிழகத்தில் இன்று 1 லட்சம் இடங்களில் 32வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.  

கொரோனா தடுப்பூசி

தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக நடத்தப்பட்டு, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் இதுவரை  31 கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.  தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை)  தமிழகம்  முழுவதும் 1 லட்சம் இடங்களில் 32-வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.  12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்  கொரோனா தடுப்பூசிகள்  இலவசமாக போடப்பட்டு வருகின்றன.   இந்நிலையில்  இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுதும் அனைத்து தரப்பினருக்கும்  75 நாட்களுக்கு   இலவசமாக ‘பூஸ்டர் டோஸ்’ போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

தடுப்பூசி

அதன்படி, தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லா பூஸ்டர்  தடுப்பூசி செலுத்தப்படுகிறது.    இன்று நடைபெறும் 32ஆவது மெகா தடுப்பூசி முகாம்களில் இலவச பூஸ்டர் டோஸ் போடப்படுவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்  என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.   காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த முகாம்களில்  இலவச  தடுப்பூசி செலுத்தப்படுகிறது.  காலை முதலே  பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை  ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் (1 நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள்) என 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடைபெற்று வருகின்றன.