திமுகவின் ஓராண்டு கால ஆட்சி மக்களுக்கு வெறுப்பையே கொடுத்திருக்கிறது - சசிகலா

 
sasikala

திமுகவின் ஓராண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டிருப்பதால் மக்களுக்கு வெறுப்பை மட்டுமே  கொடுத்திருக்கிறது என  சசிகலா விமர்சனம் செய்துள்ளார்.

சசிகலா தமிழகத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். இந்தநிலையில் தென்மாவட்டங்களில்  மீண்டும் ஆன்மீக சுற்றுபயணத்தை மேற்கொண்டுள்ள சசிகலா  இன்று தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில்   5 அடி உயர வெண்கல வேலுடன் சுவாமி தரிசனம் செய்தார்.  மூலவர்  சன்னதியில் விஸ்வப தரிசனம் செய்தார். தொடர்ந்து பஞ்சலிங்கம்,  சண்முகர் சன்னதியில் தரிசனம் செய்த அவர், வேலுடன் வள்ளி குகைக்கோவிலுக்குச்  சென்று சுவாமி தரிசனம் செய்து 5- அடி உயர வெண்கல வேலினை கோவிலிலுக்கு காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினார்.

sasikala

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் வேண்டுதல் காரணமாகவே வேல் காணிக்கை செலுத்தியதாக கூறினார். மேலும் விரைவில் அரசியல் பயணத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் மக்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து  அதிமுகவை கைப்பற்றுர்களா என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் அதிமுகவில் தான் இருப்பதாகவும்,  எங்கள் கட்சி அதிமுக என்றும் தெரிவித்தார். மேலும் அதிமுக தலைவர்கள் தன்னை  விமர்சிப்பதற்கு பதில் கூறிய அவர் தொண்டர்கள் தான் தலைவர் ஆகிறார்கள் எனவும் பதிலளித்தார். தொடர்ந்து  திமுகவின் ஓராண்டு ஆட்சி குறித்து பேசிய சசிகலா இந்த ஓராண்டு கால ஆட்சியில் திமுக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என விமர்சனம் செய்தார். மேலும் தமிழகத்தில் பெண்களுக்கு இரவில்  பாதுகாப்பு இல்லை என்றும் இரவு ஒன்பது மணிக்கு மேல் பெண்கள் தனியே செல்ல முடியவில்லை என்றும் குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டிய அவர்  காவல் நிலையங்களில் திமுகவினரால் கட்டப்பஞ்சாயத்து நடைபெற்று வருவதால் மக்கள் யாரும் நிம்மதியாக இருக்க  முடியவில்லை என்றார்.  இதனால் திமுகவின் ஓராண்டு கால ஆட்சியில் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.