பொதுக்குழுவே செல்லாது., ஓ.பி.எஸ். நீக்கப்பட்டது எப்படி செல்லும்? - சசிகலா கேள்வி

 
sasikala

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனதே கேள்விக்குறியாக உள்ளபோது, ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது எப்படி செல்லும்? என சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார். 

அதிமுக பொது குழு கூட்டம் நடத்த ஓ. பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தாக்கல் செய்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் இன்று காலை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.  இதை அடுத்து திட்டமிட்டபடி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொருளாளருக்கான அதிகாரங்களை குறைத்து பொதுச்செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் தரப்பட்டது.

ops sasikala

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் திருமண நிகழ்வில் பங்கேற்ற வி.கே.சசிகலா பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனதே கேள்விக்குறியாக உள்ளபோது, ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது எப்படி செல்லும்? அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு யாரெல்லாம் போட்டியிட முடியும்? பொதுக்குழுவில் பொருளாளரே நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆகையால், பொதுக்குழுக் கூட்டம் நடந்ததே செல்லாது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்தவர்கள், கலவரம் செய்து, பதவியைப் பிடிக்கும் சுயநலக் குழுக்களாக செயல்படமாட்டார்கள். அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் என்னையே ஆதரிக்கின்றனர். விரைவில், கட்சியிலிருந்து வெளியில் சென்றவர்கள், அதிருப்தியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரே தலைமையின் கீழ் கொண்டுவந்து, தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம். இவ்வாறு கூறினார்.