கட்சி அலுவலகம் செல்வேன்... அதிமுகவிற்கு தலைமை ஏற்பேன் - சசிகலா அதிரடி

 
sasikala

நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் எனவும், அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன் எனவும் சசிகலா தெரிவித்துள்ளார். 

திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவரும்,  மறைந்த முன்னாள் முதல்வருமான அண்ணாதுரையின் 114 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.  அண்ணாதுரையின் பிறந்த நாளை ஒட்டி மதுரையில் நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில், தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள சசிகலாவின் இல்லத்தில் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். 

sasikala

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம். நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன். பன்னீர்செல்வத்துடன் நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். நிச்சயமாக அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றிணைந்து நல்ல வெற்றிகளை பெறும். திமுக அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை என போகும் இடங்களில் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏழை எளிய மக்களுக்காக அம்மா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்துவது அவர்களுக்கு நல்லதல்ல.இவ்வாறு தெரிவித்தார்.