தி.மு.க. ஆட்சியில் மாமூல், வசூல் வேட்டை தலைவிரித்து ஆடுகிறது - சசிகலா குற்றச்சாட்டு

 
sasikala

தி.மு.க. ஆட்சியில் மாமூல், வசூல் வேட்டை தலைவிரித்து ஆடுவதாக சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சசிகலா இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்திய சசிகலா பேசியதாவது:
மாமூல் வசூல் வேட்டை தி.மு.க. ஆட்சியில் தலைவிரித்து ஆடுகிறது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழகத்தில் இப்போது சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. பெண்களுக்கு இப்போது பட்டப்பகலிலேயே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைதான். ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் பெண்கள் நள்ளிரவிலும் வீதிகளில் தைரியமாக செல்லலாம். இன்றைக்கு அப்படி ஒரு சூழ்நிலை இல்லை. தி.மு.க. ஆட்சியாளர்களை கேட்டுக் கொள்வது காவல் நிலையங்களில் தி.மு.க.வினர் உள்ளே நுழைந்து அத்துமீறல் செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். அம்மாவின் ஆட்சிகாலத்தில் கழகத்தினர் யாரும் காவல் நிலையத்திற்கு உள்ளே செல்லமாட்டார்கள். இதுதான் அம்மாவின் கண்டிப்பு. இப்போது காக்கி சட்டையை போட்டவர்களை பார்த்தால் எனக்கே பாவமாக உள்ளது. 

sasikala

காவல் நிலையத்திற்குள்ளே காவல் துறையினர் அவர்களது நாற்காலிகளில் தைரியமாக அமர முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் தர முடியாத நிலைமை தான் இன்றைக்கு உள்ளது. காரணம் தி.மு.க. வினர் உள்ளே நுழைத்து அத்துமீறலில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் எழுந்து நிற்கும் நிலைமைதான். சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை. பேணி காக்க முடிய வில்லை. என்ன காரணம் தி.மு.க.வினர் மிரட்டுவது மக்களுக்கே மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. தமிழகத்தில் யார் ஆட்சியில் இருந்தால் நல்லது செய்வார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மக்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது. வருங்காலம் நன்றாக இருக்கும் மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக நான் குரல் கொடுத்துக் கொண்டே தான் இருப்பேன். இவ்வாறு சசிகலா பேசினார்.