சங்கரன்கோவில் அருகே தீண்டாமை - போலீசார் விசாரணை!!

 
tn

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் பள்ளி குழந்தைகள் அருகில் உள்ள கடைகள் தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம்.  அந்த வகையில்  தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் தின்பண்டம் வாங்க  சென்றுள்ளனர். அதற்கு அந்த கடைக்காரர் யாரும் இங்க தின்பண்டம் வாங்க வேண்டாம்,  நீங்க ஸ்கூலுக்கு போங்க;  வீட்டில் போய் அந்த கடையில் தின்பண்டம் கொடுக்க மாட்டேங்குறாங்கன்னு சொல்லுங்க என்று கூறுகிறார்.  அப்போது ஒரு மாணவன் எதுக்கு? என்று கேள்வி எழுப்ப கொடுக்க மாட்டாங்கடா ஊர்ல கட்டுப்பாடு வந்திருக்கு  என்று கூறுகிறார்.  உடனே அந்த சிறுவன் கட்டுப்பாடா? என்று கேட்க,  உங்க யாருக்குமே கொடுக்க கூடாதுன்னு சொல்லி ஊர்ல கூட்டம் போட்டு பேசி இருக்கு,  போங்க என்று விரட்டி அடிக்கிறார்.  மிட்டாய் வாங்க முடியாமல் , கடைக்காரர் சொல்வதும் புரியாமல் குழந்தைகள் அங்கிருந்து செல்வது போன்ற வீடியோ ஒன்று நேற்று முதல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ள நிலையில் பலரும் நவீன காலத்திலும் தீண்டாமை முறை கடைபிடிக்கப்படுவது எண்ணி கவலை  தெரிவித்து வருகின்றனர்.

tn

இந்நிலையில் சங்கரன்கோவில் பாஞ்சாகுளம் கிராமத்தில் நடக்கும் தீண்டாமை அவலம் குறித்து வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தின்பண்டம் வழங்க மறுத்தது தொடர்பாக கடை உரிமையாளர், ஊர் நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சாதிய பாகுபாடுக்கு எதிராக தனது வாழ்நாள் எல்லாம் போராடிய  பெரியாரின் 144 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் தீண்டாமை என்ற பெயரில் கடைக்கு வந்த குழந்தைகளை விரட்டியடிக்கும் இந்த வீடியோ,  சமூகம் இன்னும் முன்னேறவில்லை  என்பதையே நமக்கு மீண்டும் ஒருமுறை  வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.