சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பலி

 
சாத்தூர் பட்டாசு ஆலை

சாத்தூர் அருகே கனஞ்சாம்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை கனஞ்சம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலை நாக்பூர் உரிமம் பெற்று 40-க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வியாழக்கிழமை காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொடங்கியது. மதியம் உணவு  இடைவேளைக்கு பின்னர் ராக்கெட் தயாரிக்கும் ஒரு அறையில் பட்டாசுகளிக்கான மருந்து செலுத்தும் போது உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது.ஒரு அறையில் ஏற்பட்ட வெடி அடுத்த அறையில் பரவி 8 அறைகள் தரைமட்டமாகின. 

இதையடுத்து தகவலறிந்த சிவகாசி சாத்தூர்,வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடிவிபத்தில் சத்திரப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி மற்றும் உடல் கருகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மாரீஸ்வரன்,கருப்பசாமி,மாரிமுத்து ராஜ்குமார்,தங்கராஜ்,ஜெயராஜ்    மாரியப்பன் உள்பட 10 பேர் காயமடைந்த நிலையில் சாத்தூர் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்த இடத்தில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.