அண்ணாமலை எடுத்த நடவடிக்கையை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன் - சூர்யா சிவா

 
Surya siva

தமிழக பா.ஜ.க ஓ.பி.சி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா, கட்சியின் சிறுபான்மையினர் அணித் தலைவர் டெய்சி சரண் இருவருக்கும் இடையேயான சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்த விவகாரம் தொடர்பாக, இருவரிடமும் இந்த தொலைபேசி  உரையாடல் குறித்து அக்கட்சியின்  மாநில துணைத்தலைவரும், ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவருமான கனகசபாபதி  திருப்பூரில் விசாரணை நடத்தினார்.அப்போது  டெய்சி சரண், மற்றும்  திருச்சி சூர்யா ஆகியோர்  விசாரணைக் குழு முன்பு  ஆஜராகி விளக்கமளித்தனர்.

டெய்சி

இதையடுத்து பெண்களை இழிவுபடுத்துவதை பாஜக ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது மற்றும் இருவரும்  சுமூகமாக சென்றுவிட்டோம் என்று சொன்னாலும்  அதை பாஜக மாநில தலைவராக ஏற்க மறுப்பதாகவும் நற்பண்புகளுடன் பல தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம் அதனால் தமிழக பாஜக ஒபிசி அணி மாநில பொது செயலாளரான சூர்யா சிவா கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாகவும் கட்சியின் தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம்.அவரது நடவடிக்கைகளில் மாற்றம் மற்றும் அவர் மீது நம்பிக்கை வந்தால் மீண்டும் அவருக்கு பொறுப்பு தேடி வரும் என்று அண்ணாமலை அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் திருச்சி சூர்யா சிவா தனது டிவிட்டர் பக்கத்தில், அண்ணாமலை காவல்துறையில் இருந்தபோது, அவரது அதிரடி நடவடிக்கை தொடர்பான செய்தியின் புகைப்படத்தை பதிவிட்டு, ”அவர் அப்பவே அப்படி இப்ப கேக்கவா வேணும்.. என் மேல் தலைவர் அண்ணாமலை எடுத்த நடவடிக்கையை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன் . மீண்டும் அவர் நம்பிக்கையை பெற்று மீண்டு வருவேன் . என்றும் அண்ணன் அண்ணாமலை வழியில் #அதிரடி_அண்ணாமலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.