திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைகிறாரா ? - முக்கிய தகவல்

 
Surya

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திருச்சி சிவாவின் மகன் சூர்யா விருப்ப மனு அளித்தார். நேர்காணலில் பங்கேற்ற சூர்யாவுக்கு, திமுக தலைமை சீட் கொடுக்கவில்லை. இதனால் திருச்சி சிவாவின் மகன் அதிருப்தியில் இருந்து வந்தார். தனது குடும்பத்தினர் பாரம்பரியமாக திமுகவில் இருந்தும், தனது தந்தைக்கும், தனக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை என்ற அதிருப்தி அவருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது கேரளாவில் இருப்பதால், அவர் தமிழகம் வந்ததும் அவரை சந்தித்து பாஜகவில் சேர இருப்பதாக தெரிகிறது. 

surya

திமுகவில் வாரிசு அரசியல் அதிகம் இருப்பதால் பாஜகவில் இணைய உள்ளதாகவும், திமுகவில் சபரீசன் அணி , உதயநிதி அணி ,  கனிமொழி அணி என ஒருவருக்கொருவர் போட்டி போட்டு செயல்படுவதாகவும் சூர்யா குற்றம்சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனிமொழி அணியில் இருந்ததால் திமுகவில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் ,சபரீசன் அணிக்கும்  உதயநிதி அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார். திமுகவின் முக்கிய புள்ளியாக கருதப்படும் திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திமுக மற்றும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.