நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு : சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

 
TNPSC

 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு  பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட   தமிழக அரசுத் துறையில்  காலியாக உள்ள  7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான  குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, கட்டாய தமிழ் மொழி தகுதி( 100 கேள்விகள் )  & மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு( 75 கேள்விகள் ) , திறனறி பகுதி ( 25 கேள்விகள் ) என்று மொத்தம் ( 200 கேள்விகள்)  300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது.  காலை 8.30 மணிக்குள்ளாகத் தேர்வர்கள்  தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என்றும், முகக்கவசம் கட்டாயம் என்றும், ஹால் டிக்கெட், புகைப்படம், பேனா தவிர வேறு எதையும் எடுத்துவரக்கூடாது என்றும்,  முறைகேட்டில் ஈடுபட்டால் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் TNPSC தெரிவித்திருக்கிறது.  

டிஎன்பிஎஸ்சி

மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் நடைபெறும் தேர்வை 22 லட்சத்து  02 ஆயிரத்து 942 பேர் எழுத உள்ளனர். அவர்களில்  9,35,354 ஆண்களும், 12,67,457 பெண்களும், 131 3-ம் பாலினத்தவர்களும் தேர்வை எழுதுகின்றனர்.   அதேபோல்  இதில் 27,449 மாற்றுத்திறனாளிகள், 12,644 விதவைகள், 6,635 முன்னாள் ராணுவத்தினரும் உள்ளனர். குரூப் 4 தேர்வைக் கண்காணிக்க  1,10,150 தேர்வறை கண்காணிப்பாளர்கள், 7,689 கண்காணிப்பு அலுவலர்கள், 1,932 நடமாடும் கண்காணிப்பு படைகள், 534 பறக்கும் படையினர், 7,689 ஒளிப்பதிவாளர்கள், 7,689 சிசிடிவி ஆபரேட்டர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை, 503 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.   இங்கு மட்டும் 1,56,218 பேர் எழுத உள்ளனர்.

பேருந்து பயணம்

 இந்நிலையில், தேர்வர்களின்  வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் கோரிக்கையின் படி தேர்வு மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகளை இயக்கவும், தேர்வு மையங்களில் சிறப்புப் பேருந்துகள் நின்று செல்லவும், ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதை ஒருங்கிணைக்கும் பணியில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.