சென்னையில் 100 ரூபாயை தொட்ட தக்காளி விலை - மக்கள் அதிர்ச்சி

 
tomotto

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னை கோயம்பேடு மார்க்கெட் தான் சென்னை மக்களில் காய்கறி தேவையை பூர்த்தி செய்கிறது. இங்கிருந்து தான் சென்னை மாற்றும் புறநகர் மக்களுக்கு காய்கறி சப்ளை ஆகிறது. கோயம்பேடு மார்க்கெட் 295 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய ஒரு சந்தை வளாகமாகும். 1996 இல் திறக்கப்பட்ட இந்த வளாகத்தில் 1,000 மொத்த விற்பனை கடைகள் 2,000 சில்லறை கடைகள் உட்பட சுமார் 3,100 கடைகள் உள்ளன. இவற்றுள் 850 பழக் கடைகள் உள்ளது. காய்கறிகளின் வரத்து அதிகரிக்கும் போது விலை குறைவதும், வரத்து குறையும் போது விலை அதிகரிப்பதும் வழக்கமான ஒன்றுதான். 

tomotto

இந்நிலையில், கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வரத்து குறைவு காரணமாக ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக கிலோ 5ரூபாய்க்கு விற்பனை ஆன தக்காளியால் விவசாயிகளுக்கு அசல் கூட கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக அவர்கள் விளைச்சலை குறைத்தனர். இதனால் தற்போது வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் கடந்த மாதம் 50  ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 80 லாரிகள் வரும் நிலையில், விளைச்சல் குறைவு காரணமாக தற்போது 30 லாரிகள் மட்டுமே வருகிறது. இனி வரும் காலங்களில் மேலும் தக்காளி விலை அதிகரிக்க கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.