ஓய்வுகாலப் பலன்கள் வழங்கப்படவில்லை... முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை!!

 
k balakrishnan

 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

tn govt

2020-ம் ஆண்டு மே மாதத்துக்கு பிறகு மரணமடைந்த, விருப்ப ஓய்வுபெற்ற ஊழியர்களது ஓய்வுகாலப் பலன்கள் வழங்கப்படவில்லை. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை.

தங்களது உழைப்பின் மூலம் போக்குவரத்து கழக வளர்ச்சிக்கு பாடுபட்ட இந்த ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள், கடந்த அதிமுக அரசால் பல ஆண்டு காலம் மறுக்கப்பட்டு வந்துள்ளது.ஏற்கெனவே தொழிற்சங்கங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியபோதும், அதிமுக அரசு அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

balakrishnan

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தங்களது பிரச்சினைக்கு தீர்வு காணும் என நம்பி அமைதியான முறையில் கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றனர். திமுக தனது தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளது. எனவே, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.